3. ஈஸா நபியின் வருகை
தஜ்ஜாலின் கொடுமை தலை விரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவார்கள் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும்.
ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலை நாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர்.
எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது. அதை இங்கே விளக்கினால் கியாமத் நாளின் அடை யாளங்கள் என்ற தலைப்பை விட்டு விலகிச் செல்வதாகத் தோன்றும்.
எனவே ஈஸா நபி மரணித்து விட்டார்களா? என்ற தலைப்பில் தனியாக ஒரு ஆய்வுக் கட்டுரை நூலின் இறுதியில் சேர்த்துள்ளோம். அக்கட்டுரை இது குறித்த அனைத்து சந்தேகங்களையும் நீக்கும். இன்ஷா அல்லாஹ்.
தஜ்ஜால் இவ்வாறு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது ஈஸா நபியவர்கள் வருவார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்.
இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை அல்லாஹ் அனுப்புவான். அவர்கள் குங்குமச் சாயம் தோய்க்கப்பட்ட இரண்டு ஆடைகள் அணிந்து தமது இரு கைகளையும் இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது வைத்தவர்களாக டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரின் கிழக்கே உள்ள வெள்ளை மினராவின் அருகே இறங்குவார்கள். அவர்கள் தலையைக் குனிந்தால் நீர் சொட்டும்! தலையை உயர்த்தினால் முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் உதிரும். அப்போது அவர்களின் பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும். அவர்கள் தஜ்ஜாலைத் தேடுவார்கள். (பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள) லுத் என்ற கிராமத்தின் வாசலில் அவனைக் கொல்வார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
மர்யமுடைய மகன் நீதியான தீர்ப்பளிப்பவராக இறங்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர் சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 2476, 3448, 3449
ஈஸா நபி இறங்கும் போது ஒட்டகங்கள் சவாரி செய்யப்படாமல் விடப்படும். பொறாமையும், கள்ளமும், கபடமும் இல்லாது ஒழியும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 221
ஈஸா நபி நபியாக வர மாட்டார்
ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும் போது இறைத் தூதராக வர மாட்டார்கள். புதிய மார்க்கம் எதையும் கொண்டு வர மாட்டார்கள்.
உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும் போது ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : புகாரி 3449
ஈஸா நபியவர்கள் இறங்கும் போது அப்போதைய முஸ்லிம்களின் தலைவர் 'வாருங்கள்! எங்களுக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று ஈஸா நபியிடம் கேட்பார். அதற்கு ஈஸா நபியவர்கள் 'உங்களைச் சேர்ந்த ஒருவர் தான் உங்களுக்குத் தலைவராக இருக்க முடியும். இது இந்தச் சமுதாயத்துக்கு இறைவன் அளித்த கண்ணியமாகும்'' என்று ஈஸா நபி கூறி விடுவார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 225
தஜ்ஜாலைக் கொல்வார்கள்
ரோமானியர்கள் (அதாவது கிறித்தவ சக்திகள்) அஃமாக் அல்லது தாபிக் என்ற இடத்தில் பாளையம் இறங்குவார்கள். அவர்களை எதிர் கொள்வதற்காக அன்றைய உலகில் மிகச் சிறந்தவர்களைக் கொண்ட படை ஒன்று மதீனாவிலிருந்து புறப்படும். போருக்காக அணிவகுத்த பின் 'எங்களைச் சேர்ந்தவர்களைச் சிறைப்பிடித்தவர் களுடன் நாங்கள் போரிட வேண்டும். நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்'' என்று ரோமானியர்கள் கேட்பார்கள். அதற்கு முஸ்லிம்கள் 'எங்கள் சகோதரர்களைத் தாக்க நாங்கள் இடம் தர மாட்டோம்'' என்று கூறி அவர்களுடன் போர் புரிவார்கள். முஸ்லிம்களின் படையில் மூன்றில் ஒரு பகுதியினர் பின் வாங்கி விடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அல்லாஹ்விடத்தில் அவர்கள் தாம் சிறந்த ஷஹீத்கள் ஆவர். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினர் வெற்றி பெறு வார்கள். அவர்கள் கான்ஸ்டான்டி நோபிலை வெற்றி கொள்வார்கள். தமது வாள்களை ஒலிவ மரத்தில் தொங்க விட்டு போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போது மஸீஹ் (ஈஸா நபி) வந்து விட்டார் என்று ஷைத்தான் பரப்புவான். உடனே அவர்கள் புறப்படுவார்கள். ஆனால் அது பொய்யாகும்.
அவர்கள் சிரியாவுக்கு வந்து போருக்காக படை அணிகளைச் சரி செய்து கொண்டிருக்கும் போது மர்யமின் மகன் ஈஸா இறங்குவார்கள். அவர்களுக்குத் தளபதியாக ஆவார்கள். அல்லாஹ்வின் எதிரி (தஜ்ஜால்) அவர்களைக் காணும் போது தண்ணீரில் உப்பு கரைவது போல் கரைந்து விடுவான். அப்படியே அவர்கள் அவனை விட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான். ஆனாலும் ஈஸா நபியவர்கள் அவனைத் தமது கையால் கொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5157
தஜ்ஜாலைக் கண்டவுடன் மக்கள் மலைகளை நோக்கி ஓட்டம் பிடிப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அல்லாஹ் வின் தூதரே! அந்நாளில் அரபுகள் எங்கே? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அரபுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்கள்'' என விடையளித்தார்கள்.
நூல் : முஸ்லிம் 5238
தஜ்ஜாலைக் கொன்ற பின் தஜ்ஜாலிடமிருந்து தப்பித்த கூட்டத்தினர் ஈஸா நபியிடம் வருவார்கள். அவர்களின் முகத்தைத் தடவிக் கொடுப்பார்கள். சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
தஜ்ஜாலை ஈஸா நபி கொன்ற பின்னர் ஏழு ஆண்டுகள் எந்த இருவருக்கிடையிலும் எந்தப் பகையும் இல்லாத நிலை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5233
இந்த நிலையில் 'யாராலும் வெல்ல முடியாத அடியார்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவர்களைத் தூர் மலையின் பால் அழைத்துச் செல்வீராக'' என்று ஈஸா நபிக்கு அல்லாஹ் செய்தி அனுப்புவான்.
நூல் : முஸ்லிம் 5228
ஈஸா நபி அடக்கம் செய்யப்படும் இடம்
ஈஸா நபியவர்கள் மரணித்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்தின் அருகில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகின்றது.
இது குறித்து திர்மிதியில் 3550வது ஹதீஸிலும் இன்னும் சில நூல்களிலும் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை உஸ்மான் பின் ளஹ்ஹாக் என்பவர் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். இது குறித்து ஹதீஸ்கள் யாவும் பலவீனமானவையே என்று திர்மிதீ இமாம் குறிப்பிடுகிறார்கள்.
4. யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதில்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர்.
முடிவில் இரண்டு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை அவர் அடைந்த போது,அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார்.'துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்க ளுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?'' என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். 'என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்குமி டையே தடுப்பை அமைக்கிறேன்'' என்றார். (தனது பணியாளர்களி டம்) 'என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டு வாருங்கள்!'' என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமான போது 'ஊதுங்கள்!'' என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். 'என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்'' என்றார். அதில் மேலேறுவதற்கும்,அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறை வனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும் போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மை யானது என்றார். அவர்களை ஒருவரோடு ஒருவராக மோத விடுவோம். ஸூர் ஊதப்படும். அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.
(அல்குர்ஆன் 18:94-99)
முன்பே அந்தக் கூட்டத்தினர் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அம் மலைகளுக் கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது.
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்றெல்லாம் இந்த வசனங்களிலிருந்து நாம் அறியலாம்.
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் 21:96)
யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்களுக்கு வழி திறக்கப்படும் என்பதை இந்த வசனமும் அறிவிக்கின்றது.
அப்போது அல்லாஹ் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரை அனுப்பு வான். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்கு தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் முற்றுகையி டப்படுவார்கள். ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறிக் கிடக்கும். நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.
அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.
"பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தி யைத் திரும்பக் கொடு'' என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் நிழல் பெறு வார்கள். பாலில் பரகத் செய் யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத் திரத்துக்குப் போது மானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத் துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். அவர்கள் வாழும் போது தான் உலகம் அழியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறுவார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 5228
அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.
நவீன கருவிகளையும், ஆகாய விமானங்களையும், தொலை நோக்கிக் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள காலகட்டத்தில் அப்படி ஒரு கூட்டம் அடைக்கப்பட்டிருந்தால் உலகத்திற்குத் தெரியாமல் இருக்குமா? செம்பு உருக்கி ஊற்றப்பட்டால் அதன் பளபளப்பை வைத்து இனம் காணலாமே என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். அந்தக் கேள்வி தவறானதாகும்.
மனிதனிடம் இத்தகைய நவீன சாதனங்கள் இருந்தாலும் அவை முழு அளவுக்கு இன்னமும் பயன்படுத்தப்படவில்லை. மிக உயரத்திலிருந்து கொண்டு பூமியைப் படம் பிடித்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறார்களே தவிர பூமியின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏன் ஒவ்வொரு ஏக்கரையும் கூட மனிதன் இந்தக் கருவிகள் மூலம் இது வரை ஆராயவில்லை. பூமியிலேயே இருக்கும் சில பகுதிகளை இப்போதும் கூட கண்டுபிடித்ததாகச் செய்திகள் வருவதிலிருந்து இதை உணரலாம்.
இந்த மண்ணுலகில் மனிதனின் கால் படாத நிலப்பரப்புகள் ஏராளம் உள்ளன. ஆகாயத்தில் வட்டமடித்து சக்தி வாய்ந்த தொலைநோக்கிக் கருவிகள் மூலம் ஒவ்வொரு ஏக்கராக ஆராய முற்பட்டாலும் மரங்கள், காடுகள் போன்ற தடைகள் இல்லாவிட்டால் தான் பூமியில் உள்ளவர்களைப் பார்க்க முடியும். தடைகள் இருந்தால் அந்தக் காடுகளைத் தான் பார்க்க முடியும்.
குறிப்பிட்ட காட்டில் தான் வீரப்பன் இருக்கிறான் என்று தெளிவாகத் தெரிந்த நிலையில் அவனது இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாததற்கு இது தான் காரணம். காடுகளும், குகைகளும், தொலைநோக்கிக் கருவிகள் மூலம் பார்ப்பதைத் தடுத்து விடுகின்றன.
இலங்கையில் பிரபாகரனும், புலிகளும் இந்திய இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட முடியாமல் போனதற்குக் கூட அடர்த்தியான காட்டுப்பகுதியை அவர்கள் தேர்வு செய்தது தான் காரணம். இலங்கையில் இராணுவத்தினர் மரங்களை வெட்டி வீழ்த்தி வருவதும் இந்தக் காரணத்துக்காகவே.
மலைகளால் சூழப்பட்ட காடுகளிலோ, அல்லது குகைகளிலோ யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் இருந்தால் எந்தச் சாதனங்கள் மூலமும் அவர்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியாது.
செம்பு எனும் உலோகம் விரைவில் பாசி படிந்து பச்சை நிறத்துக்கு மாறி விடுவதால் அதன் பளபளப்பை வைத்தும் கண்டு பிடிக்க முடியாது. தொலைவிலிருந்து பார்க்கும் போதும், அருகிலிருந்து பார்க்கும் போதும் கூட மலைகளில் புல் வளர்ந்திருப்பது போன்ற தோற்றமே தென்படும்.
எனவே எவரது கண்களுக்கும் புலப்படாமல் இந்தக் கூட்டத்தினர் இந்தப் பூமியின் ஒரு பகுதியில் வாழ்ந்து வருவது சந்தேகப்பட வேண்டியதன்று.
இனி வருங்காலத்தில் மனிதன் முயன்று நெருங்கலாம். அந்த நேரம் அவர்கள் வெளியே வர வேண்டிய காலமாக யுகமுடிவு நாளின் நெருக்கமாகத் தான் இருக்க முடியும்.
இந்தக் கூட்டத்தினர் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சில விபரங்களையும் நாம் அறிந்து கொள்வோம்.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வரும் வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ், நூல்: அஹ்மத் 21299
இந்தக் கூட்டத்தினர் தனியான இனத்தவர் அன்று. ஆதம் (அலை) அவர்களின் சந்ததியில் தோன்றியவர்களே என்பதைப் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது.
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கை யைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: தப்ரானி
ஒவ்வொருவரும் ஆயிரம் சந்ததிகளைப் பெற்றெடுப்பார்கள் என்பதிலிருந்து அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கும் என்று கருத முடிகின்றது.
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதை நபிகள் நாயகத்தின் பொன்மொழியிலிருந்து அறிய முடிகின்றது.
உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : புகாரி 3348
யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டம் அழிக்கப்பட்ட பின் முஸ்லிம்கள் ஹஜ்ஜும் உம்ராவும் செய்வார்கள். ஹஜ் செய்வோர் யாரும் இல்லை என்ற நிலையில் தான் யுக முடிவு நாள் ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல்: புகாரி 1593
5. அதிசயப் பிராணி
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அதிசயப் பிராணி ஒன்றை இறைவன் படைத்து மக்களிடையே அதை நடமாட விடுவான். அந்தப் பிராணியின் வடிவம் பற்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் விபரம் காணப்படாவிட்டாலும் அத்தகைய பிராணி ஒன்று யுக முடிவு நாளின் நெருக்கத்தில் தோன்றும் என்பதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஆதாரங்கள் கிடைக்கின்றன.
அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அவர்களிடம் அது பேசும்.
(அல்குர்ஆன் 27:82)
இறை வசனங்களை மக்கள் நம்பாத மோசமான காலகட்டத்தில் அந்தப் பிராணி தோன்றும் எனவும், அது வானிலிருந்து இறக்கப்படாது எனவும், இந்தப் பூமியிலேயே தோன்றும் எனவும், தஜ்ஜால் போன்று முன்பே படைக்கப்பட்டு அந்தப் பிராணி மறைத்து வைக்கப்படவில்லை. இனி மேல் தான் அது தோன்றவிருக்கிறது எனவும் இந்த வசனத்திலிருந்து அறியலாம்.
எத்தனையோ பிராணிகள் உலகில் உள்ளன. அவற்றிலிருந்து இந்தப் பிராணி வித்தியாசப்படுகின்றது. எந்தப் பிராணியும், மனிதர்களுடன் பேசுவதில்லை. இந்த அதிசயப் பிராணியோ மக்களிடம் பேசக் கூடியதாகப் படைக்கப்படும் என்பதையும் இந்த வசனத்திலிருந்து நாம் அறியமுடியும்.
பத்து அடையாளங்களில் ஒன்றாக இந்த அதிசயப்பிராணியும் உள்ளது என்ற ஹதீஸை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதும், நண்பகல் நேரத்தில் அந்தப் பிராணி மக்களுக்குக் காட்சி தருவதும் ஆரம்ப அடையாளங்களாகும். இவ்விரண்டில் எது முதலில் தோன்றினாலும் அதைத் தொடர்ந்து அடுத்ததும் தோன்றிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி), நூல்: முஸ்லிம் 5234
இவற்றைத் தவிர அப்பிராணி பற்றி மேலதிகமாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் நாம் காண முடியவில்லை.
மனிதர்களின் கற்பனைக்கு எட்டக் கூடிய வடிவில் முன்பே மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற ஏதேனும் மிருகத்தின் வடிவில் அப்பிராணியின் வடிவம் அமைந்திருக்குமென்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குக் கூறியிருப்பார்கள். மனி தர்கள் இது வரை கண்டிராத ஒரு வடிவில் அது அமைந்திருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்க முடியும். அதன் வடிவம் தான் நமக்குக் கூறப்படவில்லையே தவிர அது வந்துவிட்டால் சட்டென்று கண்டு கொள்ளக்கூடிய முக்கியமான தன்மையை அல்லாஹ் கூறிவிட்டான்.
"மனிதர்களுடன் பேசக் கூடியதாக அப்பிராணி அமைந்திருக்கும்'' என்பதை விட எந்த அடையாளமும் தேவையில்லை. அப்படி ஒரு பிராணி தோன்றவிருக்கிறது என்று நம்புவதே நமக்குப் போதுமானதாகும் என்பதாலேயே அது பற்றி அதிக விபரம் நமக்குக் கூறப்படவில்லை.
6. சூரியன் மேற்கில் உதித்தல்
நடக்க முடியாத விஷயத்தைக் குறித்து "சூரியன் மேற்கே உதித்தாலும் இது நடக்காது'' என்று கூறப்படுவதுண்டு. சூரியன் மேற்கே உதிப்பது சாதாரணமாக நடக்கக் கூடியதன்று என்றாலும் நடக்க முடியாத இதுவும் யுக முடிவு நாளின் நெருக்கத்தில் நடக்கவுள் ளது. உலகம் தோன்றியது முதல் கிழக்கில் உதித்து வரும் சூரியன் திடீரென மேற்கிலிருந்து உதிக்கும். இந்த நிலை ஏற்பட்ட பின் ஈமான் கொள்வதோ, பாவமன்னிப்புக் கேட்பதோ இறைவனால் ஏற்கப்படாது.
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன் கியாமத் நாள் ஏற்படாது. அதைக் கண்டவுடன் மக்கள் (இறைவனை) நம்புவார்கள். ஆயினும் அதற்கு முன்பே நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அந்த நம்பிக்கை, பயனளிக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
நூல்: புகாரி 4635, 4636, 6506, 7121
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதைச் சாதாரணமான ஒன்றாகக் கருதி விடக் கூடாது. அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவையாக இருக்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் இந்தப் பூமி சுழன்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தகைய பூமியில் கிழக்கே உதித்து வரும் சூரியன் மேற்கே உதிக்க வேண்டுமானால் பூமி தன் சுழற்சியை திடீரென நிறுத்தி உடனே எதிர்த்திசையில் சுழல வேண்டும். அப்போது தான் மேற்கில் சூரியன் உதிக்க முடியும்.
நாற்பது மைல் வேகத்தில் செல்லக் கூடிய ஒரு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டால் அதில் பயணம் செய்தவர்கள் தூக்கி எறியப்படுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். திடீரென நிறுத்தப்படுவது மட்டுமின்றி உடனேயே பின்புறமாக அதே வேகத்தில் இந்தப் பேருந்து செல்வதாக கற்பனை செய்து பாருங்கள்! இது இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
அப்படியானால் ஆயிரம் மைல் வேகத்தில் சுழலும் இந்தப் பூமி திடீரென நிறுத்தப்பட்டு எதிர்த் திசையில் அதே வேகத்தில் சுழன்றால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
நினைத்துப் பார்த்திராத விதத்தில் இந்தப் பூமி குலுங்கும். கட்டிடங் கள் தகர்ந்து விழும். மலைகளும் கூட பெயர்த்து எறியப்படும். இவ்வளவு பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
7. 8. 9. மூன்று பூகம்பங்கள்
- மதீனாவின் கிழக்கே ஒரு பூகம்பம்.
- மதீனாவின் மேற்கே ஒரு பூகம்பம்.
- அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்.
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பங்களும் ஏற்படும். மனிதர்கள் உயிருடன் புதையுண்டு போவார்கள்.
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162
உலகில் ஆங்காங்கே பூகம்பங்களும் ஏற்பட்டு வருகின்றன என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடக்கூடிய இந்தப் பூகம்பங்கள் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும்.
இம்மூன்று பூகம்பங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று தனி அடையாளங்களாகக் கூறியுள்ளார்கள். இம்மூன்றையும் சேர்த்து இது வரை ஒன்பது அடையாளங்களை நாம் விளக்கியுள்ளோம்.
10. பெரு நெருப்பு
எமன் நாட்டில் மிகப் பெரும் நெருப்பு ஏற்பட்டு அந்நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி மொத்த உலகையும் சூழ்ந்து கொள்ளும். யாராலும் அணைக்க முடியாத அந்நெருப்பு பரவ ஆரம்பித்ததும் மக்கள் தத்தமது ஊரைக் காலி செய்து விட்டு ஓட ஆரம்பிப்பார்கள். நெருப்பும் அவர்களை விரட்டிச் செல்லும். முடிவில் எந்த இடத்தில் அவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்களோ அந்த இடத்தை அடைவார்கள்.
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின் பால் விரட்டிச் செல்லும், அது வரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ஏற்படக்கூடிய பத்து அடையாளங்களையும் ஓரளவு நாம் அறிந்து கொண்டோம்.
இந்தப் பத்து அடையாளங்கள் ஏற்பட்டு, பாவமன்னிப்பின் வாசல் அடைபடுவதற்கு முன் நமது வாழ்வைச் சீராக்கிக் கொள்ள இறைவன் துணை செய்வானாக!

0 comments:
Post a Comment